Kamal Haasan condemned the governor: சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநர்: கமல்ஹாசன் கண்டனம்

சென்னை: Kamal Haasan condemned the governor for defying the dignity of the assembly and insulting the people.சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிப்பதாக ஆளுநருக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த உரையில் மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாசிப்பது மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தயாரித்த உரையின் (ஆளுநரால் ஒப்புதலளிக்கப்பட்ட உரையும் கூட) பல பகுதிகளை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தது ஏற்கத்தக்கதல்ல.

அதுமட்டுமின்றி, அரசு தயாரித்துக் கொடுத்துள்ள உரையில் இல்லாத சில புதிய விஷயங்களை, சொந்தமாக சேர்த்துப் பேசியுள்ளார். சட்டமன்ற நடவடிக்கைகள் முறையாக முடிவடைந்து, தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே சட்டப்பேரவையில் இருந்தும் வெளியேறியுள்ளார் ஆளுநர். சட்டமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு ஆளுநர் பேசிவரும் பல கருத்துகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளதோடு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்ளன.

அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை, மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளார். இதுபோன்று மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிரான போக்கை தமிழ்நாடு ஆளுநர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான இப்போக்குகள் ஆளுநரால் மாற்றிக் கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்ற வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள் தள்ளப்படுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.