Jai Bhim Movie: ஒருபுறம் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை; மறுபுறம் குவியும் விருதுகள்- ஜெய்பீம் புதிய அப்டேட்

ஜெய்பீம் புதிய அப்டேட்
ஜெய்பீம் புதிய அப்டேட்

Jai Bhim Movie: வழக்குப்பதிவு சர்ச்சைகளுக்கிடையே, போஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில், சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படம் 2 விருதுகளை பெற்றுள்ளது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்த படம் ‘ஜெய்பீம்’. ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடும் வழக்கறிஞரின் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில், முன்னாள் நீதிபதி சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டனும், அவரது மனைவியாக லிஜோமோல் ஜோஸும் நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சர்ச்சை வெடித்தநிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர்கள், இயக்குநர்கள், ரசிகர்கள் களமிறங்கினர். நடிகர் சூர்யாவை மன்னிப்பு கேட்க சொல்லியநிலையில், இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கிடையில், இந்தப் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ‘ஜெய்பீம்’ படம் எடுக்கப்பட்டுள்ளதாகக்கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிரான புகாரில், வழக்குப்பதிவு செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைகள் ஒருபக்கம் நீடித்தாலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் விருதுகளை பெற்று வருகிறது. நேற்றுமுன்தினம், டெல்லியில் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றநிலையில், தற்போது போஸ்டன் திரைப்பட விழாவில், சிறந்த கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர்கான விருது எஸ்.ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Ration Rice: தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல்