Film Certification Category must in Film Advertisements: திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகை கட்டாயம்

புதுடெல்லி: Film Certification Category must in Film Advertisements. திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய சான்றளிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) வழங்கும் தணிக்கை சான்றிதழின் வகையை விளம்பரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது.

சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அது அறிவுறுத்தியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சர்டிபிகேட்) வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது. திரைப்பட (சான்றிதழ்) விதி 1983-ன் கீழ் இந்த சான்றிதழ்கள் திரைப்பட சான்றளிப்பு வாரியத்தால் வழங்கப்படுகின்றன.

திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடும் போது, எந்த சான்றிதழ் வகையைச் சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. யூ சான்றிதழை தயாரிப்பாளர் விரும்பினால் விளம்பரங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிடத் தவறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.