கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியீடு – சுவிஸ் வங்கி

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்களும், தொழிலதிபர்களும் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கள் சொந்த நாடுகளில் வரி செலுத்துவதிலிருந்து தப்புவதற்காக அவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை அங்குப் பதுக்கி வருகின்றனர்.

அங்குக் கொட்டிக் கிடக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் சுவிட்சர்லாந்து உடன் தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் விவரங்களை, அந்தந்த நாடுகளிடம் வழங்கும். இதன்படி 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் முதல் பட்டியலை இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்தது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 2-வது பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது 75 நாடுகளுடன் சுமார் 31 லட்சம் வங்கிக்கணக்குகளின் விவரங்களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையிலான விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகச் சுவிட்சர்லாந்து கூறியுள்ளது.

பகிரப்பட்ட கணக்குகளின் இந்தியர்களின் வங்கிக்கணக்குகள் எத்தனை? வங்கிக்கணக்குகளில் உள்ள தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை சுவிட்சர்லாந்து வெளியிடவில்லை. எனினும் பட்டியலில் கணிசமான அளவுக்கு இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பெறப்பட்டுள்ள விவரங்களில் 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு கணக்கை முடித்தவர்கள் குறித்த தகவல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வங்கிக்கணக்கு வைத்துள்ளோர் குறித்த விவரம், முகவரி, எவ்வளவு தொகை உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.

எனினும் பட்டியலின் அடிப்படையில் அவர்கள் முறையாக வரி செலுத்தியுள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அடுத்த கட்ட பட்டியல் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here