பிகார் அரசு பாதை தவறிவிட்டது – சோனியா காந்தி

பிகார் அரசு பாதை தவறி சென்றுவிட்டதாகவும் தொழிலாளர்கள், இளைஞர்களை வலுவாக்கும் திறமை காங்கிரஸுக்கு உள்ளதாகவும் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

பிகாரில் முதல்கட்ட தேர்தல் நாளை (அக்டோபர் 28) நடைபெறவுள்ள நிலையில், இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, “பிகாரில் முழு அதிகாரத்தில் உள்ள அரசு அதன் பாதையிலிருந்து தவறிவிட்டது.

ஆட்சியாளர்களின் நடவடிக்கை மாநிலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் இல்லை. தொழிலாளர்கள் உதவியற்றவர்களாக உள்ளனர். அரசின் மீது மிகுந்த ஏமாற்றத்தில் இளைஞர்கள் உள்ளனர். விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால், மக்கள் அனைவரும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளனர்.

பொருளாதாரத்தின் பலவீனமான நிலை மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது. பிகார் மக்கள் கடுமையான சிக்கலில் தவித்துவருகின்றனர். பட்டியலின மக்களின நிலை மிகவும் மோசமாக உள்ளது. பிகார் மக்களிடம் மாற்றத்திற்கான அறிகுறி தென்படுகிறது. பிகார் மக்களின் கைகளில் நல்ல குணங்கள், திறமை, வலிமை, கட்டுமான சக்தி உள்ளன. ஆனால் வேலையின்மை, இடம்பெயர்வு, பணவீக்கம், பட்டினியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், பிகார் மக்கள் அனைவரும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.