Tuticorin Pani Maya Matha : தூத்துக்குடியில் பனி மய மாதா திருஉருவ சப்பர பவனி: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: Tuticorin Panimaya Matha festival : பனிமய மாதா ஆலய திருவிழாவில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 440-வது ஆண்டு திருவிழா (440th Anniversary Festival) கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு 2-ம் திருப்பலி, 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும் நடந்தது.

9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு உபகாரிகளுக்காக பிஷப் இவோன் அம்புரோஸ் (Bishop Yvonne Ambrose) தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்டம் பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடந்தது.

நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். ஏராளமானவர்கள் சப்பரத்தை தூக்கி வந்தனர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் மலர்களை தூவியும் (Sprinkle flowers) , பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.

சாதி, மத பாகுபாடு இன்றி (Without discrimination of caste and religion) அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பனிமய மாதா (Pani Maya Matha) பேராலயம் தூத்துக்குடியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும். இப்பேராலயம் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982 ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக உயர்த்தினார்.

முத்துக்குளித்துறையில் 1535-37-ம் ஆண்டுகளிலேயே முத்துகுளிதுறை (Muthukulithurai) சேர்ந்த சிலர் மதம் மாறினார்கள்.முதலில் ஒரு சிலரும், பின்னர் திரளாக மதம் மாறினார்கள்.உலகில் முதன்முதலாக‌ அதிக அளவில் மக்கள் ஒரு மதத்தில் இருந்து அடுத்த மதத்துக்கு மதம் மாறி கத்தோலிக்க மறையைத் தழுவியிருந்தனர். ஆனால் இவர்கள் மத்தியில் ஆன்மீகப் பணி புரியவும், வழிபாடுகள் நிறைவேற்றவும் குருக்கள் எவருமே இருக்கவில்லை. திருத்தந்தை 3-ம் சின்னப்பரால் இயேசு சபை குருக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இக்குருக்கள் 1579-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஐந்து அறைகளைக் கொண்டு ஒரு புதிய தலைமை இல்லத்தைக் கட்டியெழுப்பினர்.

தூத்துக்குடியில் ஏற்கனவே புதிய பேதுருவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்று இருந்தது. இந்த ஆலயத்தை அருட்தந்தை பேதுரு கொன்சால்வஸ் (Father Peter Consalves) என்பவர் 1538-ம் ஆண்டில் கட்டினார். இவ்வாலயம், கொச்சி மறைமாவட்டம் 1600-ம் ஆண்டில் உருவாகும் வரை, கோவா மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இருந்தது. புனித இராயப்பர் ஆலயமே தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவர்களுக்கு முதல் பங்கு ஆலயமாக விளங்கிற்று. சுவாமி பேதுரு கொன்சால்வஸ்தான் இந்த ஆலயத்தின் முதல் பங்குக் குருவாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.