Jallikattu in Alanganallur: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: அமைச்சர் உதயநிதி தொடங்கிவைப்பு

மதுரை: Minister Udayanidhi Stalin inaugurated the jallikattu competition at Alankanallur today. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கியது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அலங்காநல்லூரில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகளும், 300 வீரர்களும் களம் காண்கின்றனர். முன்னதாக வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, துணிவுடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கக் காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார். அதேபோல், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.