Coastal cleanliness awareness marathon: சென்னையில் நாளை கடலோர தூய்மை விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை: Coastal cleanliness awareness marathon tomorrow in Chennai. சென்னையில் நாளை கடலோர தூய்மை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் நாளை (17.09.2022) கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் நடைபெறவுள்ள கடற்கரை தூய்மை இயக்கத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மராத்தான் ஓட்டமும் நடைபெறவுள்ளது.

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் நாளை கடைப்பிடிக்கப்படும் நிலையில், அதிகாலை 5 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்திலிருந்து மராத்தான் ஓட்டத்தை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கொடியசைத்து துவக்கிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை கலந்து கொள்கிறார். கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்துவோம், பாதுகாப்பான கடலை பராமரிப்போம் என்ற கருத்துடன் கூடிய மராத்தான் ஓட்டமாக இது அமையவிருக்கிறது. இந்த ஓட்டத்தில் பங்கேற்க சுமார் 4,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த மராத்தான் ஓட்டத்தில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

பொதுமக்கள் கடலிலோ அல்லது கடற்கரை பகுதியிலோ பிளாஸ்டிக் மட்டுமின்றி வேறு எந்தவித கழிவுகளையும் போடுவதை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவின் 7,500 கி.மீ.-க்கு அதிக நீளமுள்ள கடற்கரைப் பகுதி, நமது வளமான கடல் வளங்களைப் பிரதிபலிக்கிறது. இந்த வளங்களை சீரழிப்பதாக அண்மைக் காலங்களில், நிலம் சார்ந்த நடவடிக்கைகள், சுற்றுலா மற்றும் மீன்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், ஆறுகள் மற்றும் பல்வேறு நீர்வழிகள் வாயிலாக கடற்கரை மற்றும் கடற்பகுதிக்குள் சென்றடையும் கழிவுகள் உள்ளன.

இதனைத் தடுக்க, உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை, சர்வதேச கடலோர தூய்மை தினமாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்த ஆண்டு, இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் 75 கடற்கரைப் பகுதிகளில், 75 நாட்களுக்கு கடலோர தூய்மைப்பணி ஜூலை 5-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 8 கடற்கரைகளும் இதில் அடங்கும். சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் அரியமான், பிரப்பன்வலசை, தூத்துக்குடியில் வஉசி, முத்துநகர், முல்லக்காடு ஆகிய கடற்கரை பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து, “தூய்மையான கடல், பாதுகாப்பான கடல்“ என்ற தூய்மை இயக்கம் நடைபெறுகிறது.

மத்திய புவி அறிவியல் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, இந்திய கடலோரக் காவல்படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை, பிற சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த தூய்மை இயக்கத்தில் பங்கேற்று வருகின்றன.

தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கடற்கரைகளில் இந்த இயக்கத்தை, தமிழ்நாடு மாவட்ட நிர்வாகங்கள், அந்தமான் நிகோபார் நிர்வாகம், சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படை, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சென்னை பெருநகர மாநகராட்சி, தமிழக அரசு சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் – வடிவமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், சிஎஸ்ஐஆர் – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த இயக்கத்தை மேற்கொண்டுள்ளன.