Kallakurichi Riots: கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் மறுப்பு

கள்ளக்குறிச்சி: Bail denied to Kallakurichi school administrators: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தார். ஆனால் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து நீதி விசாரணை கோரி இளைஞர்கள் திரண்டு (Kallakurichi Riots) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் (Police Vehicles) அடித்து நொறுக்கப்பட்டன. இது மிகப் பெரிய கலவரமாக மாறி, பள்ளி வளாகத்தில் உள்ள பேருந்துகளை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். மேலும் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றப்பட்டுள்ளது. மேலும் கலவரம் தொடர்பாகவும் 300க்கும் மேற்பட்டோரை கைது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights) தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு கடந்த 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்தியது.

இதனிடையே, தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 17ம் தேதி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 27ம் தேதி 5 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 12 மணி நேர விசாரணைக்குப்பின், ஐந்து பேரையும் மீண்டும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி 28ம் தேதி அதிகாலை வரை (நேற்று) சேலம் மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஜாமின் வழங்கக்கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று (28ம் தேதி) மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமின் மனு மீதான விசாரணையில், சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் சென்று விட்டதால் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமின் மனுவை தாக்கல் செய்ய பள்ளி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

அப்போது எப்.ஐ.ஆர். விவரங்களை சிபிசிஐடி போலீசார் தங்களுக்கு வழங்க மறுப்பதாக பள்ளி தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.