5 lakhs each for 31 new industries: 31 புதிய தொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் வழங்கல்

சென்னை: 5 lakhs each for 31 new industries: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 31 புதிய தொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 இலட்சம் வீதம், மொத்தம் ரூ. 1.55 கோடிக்கான காசோலைகளை மானியமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை , நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் தமிழ்நாட்டில் இயங்கும் தொழில் காப்பகங்கள், தொழில் காப்பகங்களின் ஆதரவு பெற்ற புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைத்துள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

புத்தொழில்களுக்கு, உந்து சக்தியாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான துடிப்பான தொடக்க சூழலை கட்டமைப்பதற்கும், புத்தாக்கத்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பல்வேறு சீர்மிகு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கும், புத்தொழில் முனைவோர்களுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தகுதியான நிறுவனங்களுக்கு மானிய நிதியினை “தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதிTANSEED” திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் மூன்றாவது பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய், என மொத்தம் 1.55 கோடி ரூபாய் காசோலைகளை மானியமாக முதல்வர் வழங்கினார்.

முதல் நிலை நகரமான சென்னையில் இருந்து 11 புத்தொழில் நிறுவனங்களும், இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து 12 புத்தொழில் நிறுவனங்களும், மூன்றாம் நிலை நகரங்களான ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய நகரங்களில் இருந்து 8 நிறுவனங்களும், என மொத்தம் 31 நிறுவனங்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பயனாளிகள் இருக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 16 நிறுவனங்களில் நிறுவனர் மற்றுமு் இணை நிறுவனராக பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்ரவ் திறந்து வைத்தார்.

பல்வேறு துறை சார்ந்து இயங்கும் 100 புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சியை விரைவாக்க பயிற்சிகளை வழங்கும் 5 தொழில் முடுக்ககங்களை (Acclerator) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மேலாண்மை, வணிகத் தொழில்நுட்பம் மற்றும் செயலிகள், வாழ்வாதாரம், சமூக மாற்றம், ஆகிய பல்வேறு தலைப்புகளில், ஒவ்வொரு பிரிவின் கீழும் 20 தொழில் முனைவோர் கொண்ட குழுவினை உருவாக்கி, ஒவ்வொரு குழுவிற்கும் 3 மாதங்களில் இருந்து 12 மாதங்கள் வரையிலான தொழில் முடுக்க பயிற்சி பட்டறைகளை ஒருங்கிணைக்க உள்ளது.

புத்தொழில் சமூகக் குழுக்கள் தமிழ்நாட்டின் புத்தாக்க மற்றும் புத்தொழில் முயற்சிகள் அனைத்து பகுதிகளிலும் பரவலாக்கும் நோக்கில், பல்வேறு பங்களிப்பாளர்களை (Stake holders) ஒருங்கிணைக்கும் வகையில் புத்தொழில் சமூகக் குழுக்கள் (Startup TN Community Circles) தொடங்கப்பட உள்ளன. அதன் முதற்கட்டமாக 8 புத்தொழில் சமூகக் குழுக்களின் கிளைகளை (Startup TN Community Circles) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். தொழில் காப்பகங்கள் தரவரிசை வழிமுறை வரைவு வெளியீடு

தொழில் காப்பகங்களின் திறன் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மாநிலத்தில் இயங்கும் Incubator நிறுவனங்களுக்கான தரவரிசை வழிமுறை திட்ட வரைவை அவர் வெளியிட்டார். இது உலகத்தர நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் Maturity Model முறையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், ISBA அமைப்பின் தலைவர் டாக்டர் கே.சுரேஷ் குமார், Startup India தலைவர் அஸ்தா குரோவர் மற்றும் காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்துல் வகாப், எம்.பூமிநாதன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் எச். கிருஷ்ணனுண்ணி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. எஸ். அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தொழிலதிபர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.