Tn Cm M.K.Stalin meets President: குடியரசுத்தலைவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

புதுடெல்லி: Tamil Nadu Chief Minister M. K. Stalin meeting with the President: டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை தமிழக முதல்வர் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று இரவு டெல்லிக்கு வந்த நான் இன்று காலையில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும், மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்களையும், நேரில் சென்று நான் சந்தித்தேன். என்னுடைய நல்வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன்.

மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள், மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ஆகியோரின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்திருந்தது, ஆனால் என்னால் வர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும், இன்றைக்கு நான் நேரடியாக நேரம் கேட்டு அவர்களைச் சென்று சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்திருக்கிறேன்.

இரண்டு பேரும் என்னிடத்தில் மகிழ்ச்சியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள், ஆட்சியினுடைய சிறப்புக்களைப் பற்றியெல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். எனவே என்னைப் பொறுத்தவரை, இந்தச் சந்திப்பு மன நிறைவாக இருந்தது என அவர் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே சொன்ன நீட் பிரச்சனை, அதற்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை, மின்சாரம், காவேரி பிரச்சனை, மேகதாது பிரச்சனை போன்ற பல கோரிக்கைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் மீண்டும் பிரதமரை சந்தித்து நினைவுபடுத்துவோம்.

நீட் விலக்கு மசோதாவிற்கு ஏற்கனவே இருந்த குடியரசுத் தலைவர் அவர்களிடம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறோம். அதேமாதிரி, பிரதமரிடத்திலும் தொடர்ந்து வைத்திருக்கிறோம், இன்றைக்கும் வைக்க இருக்கிறோம். ஆனால், புதிதாக அவர் இப்போதுதான் பொறுப்பேற்றிருப்பதால் எந்தக் கோரிக்கையும் குடியரசுத் தலைவர் அவர்களிடம் வைக்கவில்லை. மரியாதை சந்திப்பு தான், வாழ்த்து சொல்லத்தான் வந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.