Rejected Meera Mitun Petition: நடிகை மீரா மிதுனின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை: ஒரு தனியார் நிறுவனம் (Rejected Meera Mitun Petition) ஒன்றில் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய காரணத்தினால் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை மீரா மிதுன் சார்பாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

நடிகை மீரா மிதுன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 2018ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. அவர்களை பிரபலப்படுத்துவதற்காக அந்த நிறுவனம் சார்பாக ரஞ்சிதா பத்ராத்தி என்பவர் ரூ.50 ஆயிரம் கொடுத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பணத்தை திரும்பி தரவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் என் மீது 2019ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதற்கான விசாரணை நடந்து வருகிறது. எனவே இந்த வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு (டிசம்பர் 24) இன்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் போலீசார் சார்பில், நடிகை மீரா மிதுன் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை.

எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்யக்கோரி மீரா மிதுன் தாக்கல் செய்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே தலைமறைவாக உள்ள மீரா மிதுனை போலீசார் கண்டுப்பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.