வளர்ச்சி பாதையில் சீன பொருளாதாரம்!

கரோனா பரவல் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், சீன பொருளாதாரம் 4.9 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.

கோவிட்-19 முதன் முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பரில் உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதாரம் 2020ஆம் ஆண்டு 10.3 விழுக்காடு வரை சரிவடையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் சரிவடையும் என்றும் கணித்தது.

கரோனா வைரஸ் முதலில் சீனாவில் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கரோனா பரவல் மிக வேகமாக அங்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, விரைவில் சீனா இயல்புநிலைக்குத் திரும்பியது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சீனா பொருளாதாரம் 4.9 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக, தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.

இது முன்பு கணிக்கப்பட்ட 5.2 விழுக்காடு வளர்ச்சியைவிட குறைவு என்றாலும், சர்வதேச பொருளாதாரம் சரிவைச் சந்திக்கும்போது சீன பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிலும் சீன பொருளாதாரம் 3.2 விழுக்காடு வளர்ச்சியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.