கோவிட்-19இல் கோட்டைவிட்டு ஊடகங்கள் மீது ஆத்திரப்படும் ட்ரம்ப்: ஒபாமா குற்றச்சாட்டு

கோவிட்-19 பாதிப்பை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்கள் மீது ஆத்திரப்படுகிறார் என முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா குற்றஞ்சாட்டிள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரை தீவிரமடைந்துவருகிறது. குடியரசுக் கட்தி வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்குகிறார்.

பிடனுக்கு ஆதரவாக அங்குள்ள ஒர்லான்டோ மாகாணத்தில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பரப்புரை மேற்கொண்டார். அதில் அதிபர் ட்ரம்பின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், “கோவிட்-19 பரவலை ஆரம்ப காலத்தில் அலட்சியமான முறையில் எதிர்கொண்டிருந்தார் ட்ரம்ப். அவர் கவனமாக செயல்பட்டிருந்தால் அமெரிக்கா இத்தகைய பாதிப்பை சந்தித்திருக்காது. அதில் கோட்டை விட்டுவிட்டு ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனத்தைக் கண்டு கோபம் கொள்கிறார் ட்ரம்ப்.

இவ்வாறு ஊடககங்கள் மீது ஆத்திரப்படுவது நியாயமற்றது. சீனா, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றவிதத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயல்படுகிறார். இதன் காரணமாகவே அவர் மீண்டும் ஆட்சிக்கு வர அந்நாட்டு தலைவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்றார்.