வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, ஜூலை மாதம் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு, கடைசியாக அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தங்கள் கணக்குகளைத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய, வரி செலுத்துவோருக்குவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

வரி தணிக்கை அறிக்கை, சர்வதேச / குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் வரை சுய மதிப்பீட்டு வரி செலுத்த வேண்டியவர்களுக்கு, வரி செலுத்தும் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.