Today is Maha Deepam in Thiruvannamalai: திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்

திருவண்ணாமலை: Mahadeepam is lit today at the top of the Tiruvannamalai Arunachaleswarar temple hill. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மூலிகைகளுடன் அமைந்துள்ள மலையை பவுர்ணமி தோறும் பக்தர்கள் வலம் வருவது வழக்கம். பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 27ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான நேற்று மதியம் 12 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

இதனைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

நேற்றிரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்தநிலையில் கோவிலின் முக்கிய நிகழ்வாக இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் 2ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

மகாதீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கோயிலில் மகா தீபத்தையொட்டி கரும்பு மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.