Surasamharam today: திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர்: Surasamharam today at Tiruchendur Murugan Temple. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று 4 மணிக்கு சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று நடைபெறவுள்ள சூரசம்ஹார விழாவைக் காண மாநிலம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.

முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவைத் தொடர்ந்து பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தினமும் யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டு செல்கின்றனர். விழாவின் சிகர நாளான நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை காண நேற்று காலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் முடி காணிக்கை செய்துவிட்டு, கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

இதனை தொடர்ந்து, நாளை (31-ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும். மாலை 6.30 மணியளவில் சுவாமி–அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவமும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.