Mini Philatelic exhibition: சென்னையில் சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி

சென்னை: 3 Day mini Philatelic exhibition at Anna Salai Post Office. சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல்தலை கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வட்ட தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெற உள்ள அம்ரித்பெக்ஸ் 2023 என்ற நிகழ்ச்சியின் முன்னோட்டமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறிய ரக அஞ்சல்தலை கண்காட்சி இன்று (26.01.2023) தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வட்ட தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பி. செல்வகுமார் இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். சென்னை நகர பிராந்தியத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜி. நடராஜன், தமிழ்நாடு வட்ட அஞ்சல் சேவைகளின் இயக்குநர் திரு வி. ஆறுமுகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், தமிழகத்தைச் சேர்ந்த அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்தியா மற்றும் சர்வதேச உறவுமுறைகள் முதலிய கருப்பொருட்களில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

துவக்க விழாவின்போது மேஜை காலண்டர்கள், நாடோடி இசைக் குழுக்களின் வாத்திய கருவிகள், டெரகோட்டா, இந்திய கோயில்கள் மற்றும் இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளின் நிரந்தர நியமனம் முதலியவை குறித்த கையேடுகள் வெளியிடப்பட்டன.

அஞ்சல்தலை சேகரிப்போர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறப்பு அஞ்சல் உறைகள் மற்றும் அஞ்சல்தலைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கண்காட்சி, வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.