IIT Madras records in Internship Offers: இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பில் 32 சதவீதம் அதிகரிப்பு: சென்னை ஐஐடி சாதனை

சென்னை: IIT Madras records 32% increase in Internship Offers ; உள்ளகப் பயிற்சிக்கான (இன்டர்ன்ஷிப்) ) வாய்ப்புகளில் முதல் நாளிலேயே 32 சதவீதம் அதிகரித்து ஐஐடி மெட்ராஸ் சாதனை படைத்துள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), மாணவர்களுக்காக நடத்திய உள்ளகப் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு முகாமின் (Internship Drive) முதல் நாளிலேயே 32 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்ளகப் பயிற்சிக்கான முதல்நாள் ஆட்தேர்வு முகாம் 6 மற்றும் 13 ஆகஸ்ட் 2022 ஆகிய தேதிகளில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.

நேரிலும் ஆன்லைனிலும் நேர்காணல் நடத்தி முதன்முறையாக ஹைப்ரிட் முறையில் இந்த உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் கனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் பங்கேற்க முடிந்தது.

இதில் 7 நிறுவனங்களிடம் இருந்து 15 சர்வதேச உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்புகள் வரப்பெற்றுள்ளன. உள்ளகப் பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 48 சதவீதமும், ஐஐடி மெட்ராஸ்-க்கு வருகைதந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 28 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

உள்ளகப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் (இன்டர்ன்ஷிப்) பேராசிரியர் முருகவேல், தொழில்முறைப் பயிற்சி என்பது மாணவர்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த பகுதியாகும். தாங்கள் கற்றறிந்த திறன்களைப் பயன்படுத்தவும் மெருகேற்றிக் கொள்ள மாணவர்களுக்கு அங்குதான் வாய்ப்புக் கிடைக்கின்றன. நிறுவனங்கள் உள்ளகப் பயிற்சி மூலம் ஆட்களை தேர்வுசெய்யும் முறைக்கு மாறி வருவதால், மாணவர்கள் உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் மூலம் முன்வேலைவாய்ப்புகளை (pre-placement offers) பெறுவதும் முக்கியமாகிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த ஆண்டு முற்றிலும் காணொலி முறையில் நடத்தப்பட்ட நிலையில், உள்ளகப் பயிற்சிக்கான நேர்காணல் இந்தாண்டு நேரடி மற்றும் காணொலி முறையில் நடைபெற்று வருகிறது. வருகை தந்திருக்கும் நிறுவனங்கள் நேர்காணலின் முதல் நாளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை வழங்கி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாமின் முதல் அமர்வின்போது மொத்தம் 37 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 13 நிறுவனங்கள் நேர்காணலை நேரடியாகவும், மீதமுள்ள 24 நிறுவனங்கள் நேர்காணலை முற்றிலும் ஆன்லைன் மூலமாகவும் நடத்தியுள்ளன. கனடாவில் இருந்து மாணவர் ஒருவர் உள்பட தொலைதூர மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

அதிக எண்ணிக்கையிலான உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கியுள்ள நிறுவனங்கள்:
டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் – 40 பேர்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் – 20 பேர்
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் – 17 பேர்
கோல்ட்மேன் சாக்ஸ் – 16 பேர்

உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாமை ஒருங்கிணைக்க மாணவர் குழு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் மாணவர் விவகாரங்களுக்கான செயலாளர் டி.பி.ராம்கமல் கூறுகையில்,வளாகத்திலும், காணொலியிலும் ஒரே நேரத்தில் நேர்காணல் நடப்பதால் ஹைபிரிட் முறையிலான உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாமை நடத்துவது சவால் நிறைந்த ஒன்றாகும். இக்கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் அளித்த அசைக்க முடியாத ஆதரவு, எங்கள் ஆசிரிய ஆலோசகர்கள் வழங்கிய வழிகாட்டுதல் ஆகியவைதான் இந்தாண்டுக்கான நடைமுறைகளை சிறப்பாக செய்வதற்கு உதவிகரமாக இருந்தன. இதனால்தான் அதிக எண்ணிக்கையிலான உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் கிடைத்ததுடன், குறிப்பாக முதல்நாளிலேயே மாணவர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ் மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சித் திட்ட தலைவர் நிகில் பாய் கூறும்போது, மாணவர்களின் எண்ணிக்கை, நிறுவனங்களின் தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த புதிய நிறுவனங்களை வரவழைப்பது உள்ளிட்ட பணிகளை உள்ளகப் பயிற்சிக்கான குழு முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொண்டது. இதனால்தான் உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்புகளை அதிகளவில் பெற முடிந்தது. மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நல்வாய்ப்புகளைப் பெற ஏதுவாக சர்வதேச நிறுவனங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது” என்றார்.

உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாம் மூலம் டவர் ரிசர்ச் கேபிடல் எல்எல்சி நிறுவனத்தில் இடம் கிடைத்த ஐஐடி மெட்ராஸ் மாணவர் அப்துல்லா முகமது உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில்,”இந்தாண்டு உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு பரந்த அளவில் நடைபெற்று உள்ளது. மாணவர்கள் அண்மைக் காலமாக அளவுசார் நிதி (Quantitative Fianance), கணினிசார் அறிவியல் (Scientific Computing) போன்ற துறைகளில் ஆர்வம் காட்டுவதால், அவர்களின் தேவையை உள்வாங்கி அதற்கு ஏற்ப உள்ளகப் பயிற்சிக்கான குழு மிகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளது எனத் தெரிவித்தார்.

பெய்ன் அண்ட் கம்பெனியில் உள்ளகப் பயிற்சி வாய்ப்பைப் பெற்றுள்ள மற்றொரு ஐஐடி மெட்ராஸ் மாணவரான மேவிட் மேத்யூ கூறும்போது, ஹைபிரிட் முறையிலான தேர்வுமுறை இதற்கு முன்னர் நடந்திராத நிலையிலும், மாணவர்களுக்கான ஆட்தேர்வு நடைமுறைகள் எளிமையாக இருப்பதாகவே உணர்ந்தோம். இக்கல்வி நிறுவனம் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் காரணமாக, ஆட்தேர்வு செயல்பாடுகள் பயன்பெறத் தக்கதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருந்தன எனக் குறிப்பிட்டார்.