Free GATE preparation portal: கேட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த இலவச இணையதள சேவை

சென்னை: NPTEL, IIT Madras & Amadeus Labs collaborate to introduce free GATE preparation portal to support 10 lakh aspirants: சென்னை ஐஐடி, அமெடியஸ் லேப்ஸ் இணைந்து, கேட் தேர்வுக்கு 10 லட்சம் பேரை கட்டணமின்றித் தயார்படுத்தும் வகையில் ஆன்லைன் தளத்தைத் தொடங்கி உள்ளது.

ஐஐடி மெட்ராஸ்-ன் தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டத்தின் வாயிலாக கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில், ‘NPTEL GATE’ என்ற பெயரில் ஆன்லைன் போர்ட்டல் (இணைய முகப்பு) தொடங்கப்பட்டு உள்ளது.

கேட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் எண்ணத்துடன், இந்தியாவின் முன்னணிப் பயணத் தொழில்நுட்ப அமைப்பான அமெடியஸ் லேப்ஸ் பெங்களூரு-வின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் இயங்கும் ‘NPTEL GATE’ போர்ட்டலை அனைத்து மாணவர்களும் கட்டணம் ஏதுமின்றிப் பயன்படுத்தலாம். என்பிடெல் (NPTEL) என்பது ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில், கட்டணமின்றி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் திட்டமாகும்.

கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் போர்ட்டலை பின்வரும் இணையத் தொடர்பு மூலம் பயன்படுத்தலாம் – https://gate.nptel.ac.in.

ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றில் முதுநிலைப் படிப்பு அல்லது பிஎச்.டி.யில் சேரவும், ஏனைய புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கவும் நாடு தழுவிய அளவில் நுழைவுத் தேர்வாக பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு இருந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைக்கு நபர்களை நியமிக்கின்றன.

என்பிடெல் வசமுள்ள 2,400க்கும் மேற்பட்ட தலைப்புப் பக்கங்களில் இருந்து பொறியியல், அறிவியல் ஆகியவற்றில் தற்போதைய பாடத் திட்டங்களுக்கு ஏற்ப பாடத் தொகுப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன் கேட் பாடத் திட்டத்தின் அடிப்படையில் வீடியோ தீர்வுகள், செய்முறைத் தேர்வுகள், ஆன்லைன் உதவிகள் ஆகியவை புதிய போர்ட்டல் மூலம் வழங்கப்படும்.

இன்று நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வின்போது, என்பிடெல்-ஐப் பாராட்டிப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில்,”கேட் தேர்வு என்பது மாணவர் ஒருவர் இளங்கலைப் படிப்பைப் படிக்கும்போது அவர் பெற்ற அடிப்படை அறிவை சோதிக்கிறது. கேட் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உயர்படிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இரு வாய்ப்புகளும் கிடைக்கிறது. என்பிடெல் தனது பாடத் தொகுப்புகளை வழங்கி மாணவர்களைத் தயார்படுத்த உதவுகிறது. அத்துடன் அவர்களுக்கு சமவாய்ப்பை வழங்கி எல்லோரும் போட்டிக்குத் தயார்படுத்தும் சூழலை உருவாக்குகிறது” என்றார்.

கேட் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான பிரத்யேக போர்ட்டலின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ்-ன் என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணா பசுமார்த்தி,”என்பிடெல் பாடங்கள் குறித்த விவாதக் களங்களில் பங்கேற்கும் பல மாணவர்கள் கேட் தேர்வுக்கு இதில் உள்ள பாடத் திட்டங்கள் போதுமானதா எனக் கேள்வி எழுப்புவார்கள். கேட் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்குமாறு கேட்டுக் கொள்வார்கள் அல்லது கேட் தேர்வுக்கு தயாராவதற்கான உதவிகளைக் கோருவார்கள். அதன் பின்னர்தான் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் விதத்திலும் ஒரு தளத்தை உருவாக்குவது பற்றி சிந்தித்தோம். அத்துடன் கேட் தேர்வு எழுதுவோருக்கு நேரடிக் கற்றலை செயல்படுத்தும் நோக்கில் அண்மையில் நேரடி வழிகாட்டல் அமர்வுகளையும் தொடங்கினோம்” எனக் குறிப்பிட்டார்.

‘NPTEL GATE’ போர்ட்டலின் தாக்கத்தை விரைவுபடுத்தவும், அடித்தட்டு மக்களுக்கு சமூகப் பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரவும், தேசிய அளவில் பலனடையக் கூடிய தளத்தைத் தொடங்க அமெடியஸ் லேப்ஸ் மனமுவந்த நல்லாதரவை வழங்கியுள்ளது.

இந்த போர்ட்டலின் முதல் பதிப்பு அக்டோபர் 2021ல் தொடங்கப்பட்டு, கேட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு கேட் தேர்வை ஏறத்தாழ 9 முதல் 10 லட்சம் மாணவர்கள் எழுதக்கூடும் என்பதால், நாடு முழுவதும் தேர்வுக்குத் தங்களை தயார்படுத்துவோருக்கு இந்த போர்ட்டல் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாய்ப்பை வழங்கும்.

நாடு தழுவிய அளவில் ஏற்படும் தாக்கம் குறித்துப் பேசிய, அபாக் என்ஜினியரிங் தலைவரும், அமெடியஸ் லேப்ஸ் பெங்களூரு-வின் மையத் தலைவருமான மணி கணேசன்,”இந்தியா மற்றும் உலக அளவிலான மாணவர்களை கல்வி மற்றும் தொழில் மேம்பாடு ரீதியாக மேம்படுத்துவது என்பது அமெடியசில் உள்ள அனைவருக்கும் இதயத்திற்கு நெருக்கமான விருப்பமாகும். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும், நம் நாட்டின் வருங்காலத் தலைவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கவும் பங்களிப்பை வழங்கவும் நாங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் போர்ட்டலும் ஒரு சான்றாகும். எமது சமூகத்திற்கான பொறுப்புகளை செயல்படுத்த அமெடியசில் உள்ள நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.

மேலும் ,”நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பலனடையும் வகையில் கட்டணமின்றி பயன்படுத்த ஏதுவாக என்டெல்-லின் கேட் போர்ட்டலுக்கு நிதியுதவி வழங்குவது, நேர்மறையான தாக்கத்தை விரிவபடுத்தி, பின்தங்கிய மற்றும் பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்கும் எங்கள் நோக்கத்தின் ஒரு படியாகும். சோதனை அடிப்படையில் கேட் போர்ட்டலை அறிமுகப்படுத்தியபோது இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்தத் திட்டத்தின் முடிவுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பானதொரு எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஐஐடி மெட்ராஸ்-க்கு ஆதரவை வழங்கத் தயாராக உள்ளோம்”எனத் தெரிவித்தார்.

ஐஐடிஎம் பால்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில், கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் போர்ட்டல் தொடங்கி வைக்கப்பட்டது. பால்ஸ் என்பது இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினருக்கு பொறியியல் கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில் ஐஐடி-யின் முன்னோடி முன்னாள் மாணவர்களால் 2012ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் சமூக முன்முயற்சித் திட்டமாகும்.

Also Read : Bullets seized in east Delhi : 2 ஆயிரம் தோட்டாக்கள் பறிமுதல் : 6 பேர் கைது

Also Read : Johnson & Johnson : உலகம் முழுவதும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் விற்பனை நிறுத்தம்

Introduce Free GATE preparation portal