Arunasaleswarar Theerthawari: ஈசானியகுளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருவண்ணாமலை: Arunasaleswarar Theerthawari program at Isaniakulam. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்துகொள்வார்.

அதன்படி திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் கோவிலில் இருந்து அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு வந்தார். அங்கு சூலரூபமான அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.

அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி, திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்து வந்த வல்லாள மகாராஜா என்பவர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

அருணாசலேஸ்வரரிடம், வல்லாள மகாராஜா தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார். ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறி உள்ளார். அதன்படி, ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்து உள்ளார்.

அந்த சமயத்தில் தைப்பூசத்தின் போது ஈசானிய குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அருணாசலேஸ்வரர் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்லும் போது போர்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வருக்கு தெரிவிக்கப்படும்.

பின்னர் தன்னை மகனாக பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது. அந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அறிவொளி பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் சென்ற போது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து மேளதாளங்கள் இன்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.