12,000 policemen for Tiruvannamalai Deepam festival: திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 12,000 போலீசார் பாதுகாப்பு

திருவண்ணாமலை: DGP said that 12,000 policemen will be involved in security for Tiruvannamalai Deepa festival. திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என டிஜிபி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு, நேற்று மாலை ஆய்வு செய்தார். விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் வந்து செல்லும் வழித்தடம், அவர்கள் அமரும் இடங்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், மகா தீபத்தின் போது வி.ஐ.பி. அமரும் பகுதி குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தாண்டு, டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 2,700 பேருந்துகள், 12 ஆயிரம் கார் உள்ளிட்ட வாகனங்கள் வரக்கூடும். சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. நான்கு பிரதான சாலைகள் வழியாக வாகனங்களை நிறுத்த, 52 இடங்கள் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களை தணிக்கை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால் அந்தந்த பகுதியை சேர்ந்த குற்ற தடுப்பு போலீசார் சீருடையற்ற உடையில் (சாதாரண உடை) மக்களோடு மக்களாக இருந்து சந்தேகப்படும் நபர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண கூடிய சாப்ட்வேர் மூலம் கேமராக்களில் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஐஜி கண்ணன் தலைமையில் 4 டிஐஜிக்கள், 27 எஸ்பிக்கள் உட்பட 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாஸ் வைத்துள்ள பக்தர்கள் தங்கு தடையின்றி கோயில் உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்யவும், மகா தீபத்தை பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 8-ந்தேதி வரை போலீஸ் பாதுகாப்பு திருவண்ணாமலையில் தொடரும். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் போது அனுமதி அட்டை வைத்துள்ள பக்தர்கள் எந்தவித தங்கு தடையின்றி கோவிலுக்குள் சென்று வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், மகாதீபம் பார்ப்பதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அனுமதி அட்டை இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இவ்விழா நடத்தி முடிப்பதற்கு காவல்துறை சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் இருப்பது போன்று இல்லாமல் இந்த ஆண்டு தேவையான அளவு எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே கோவிலுக்குள் மகா தீபத்தின் போது இருப்பார்கள். தேவையற்ற போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், கலெக்டர் முருகேஷ், வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.