Tamilnadu Minister Changes: தமிழக அமைச்சர்களின் துறைகள் திடீர் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இன்று பல பேரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இன்று (டிசம்பர் 14) உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு கூடுதலாக சிறப்பு திட்டங்கள் செயலாக்கள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சில அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பெரியசாமி தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ள முத்துசாமிக்கு நகர்ப்புற திட்டமிடல் துறை தற்போது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சீர்மரபினர் நலத்துறை, கதர், கிராமம் தொழில் வாரியத்துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக உள்ள ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்று சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையுடன் இதனையும் சேர்த்து கவனிப்பார் என கூறப்படுகிறது. ஏற்கனவே நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஓய்வூதியம், புள்ளியியல் துறை வழங்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பு வைத்திருந்த மெய்யநாதன் தற்போது சுற்றுச்சூழல்துறை அமைச்சராக தொடர்கிறார் என கூறப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அமைச்சரவையில் துறைகள் மூத்த அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பவம் தி.மு.க., கட்சியில் மட்டுமின்றி மாற்று கட்சியினர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.