போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு போலீசார் மீண்டும் சம்மன்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மனைவி பிரியங்கா ஆல்வா விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களது நண்பர்கள் உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கன்னட திரை உலகினருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா தலைமறைவாக உள்ளார். தனது சகோதரியும் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயின் மனைவியுமான பிரியங்கா வீட்டில் ஆதித்யா பதுங்கி இருக்கலாம் என்பதால், அங்கு சோதனையும் நடத்தப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பிரியங்கா ஆல்வாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளனர்.