இந்திய விமானப்படை நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் – விமானப்படைத் தளபதி

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் படை வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் இந்திய விமான படை வீரர்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய விமான படையில் இடம் பெற்றுள்ள பல்வேறு ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உள்ளிட்டவை சாகச செயல்களில் ஈடுபட்டன. முன்னதாக நடைபெற்ற அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா பார்வையிட்டார். முதல் முறையாக அணிவகுப்பில் ரபேல் விமானம் பங்கேற்றது.

பின்னர் விமானப்படை தளபதி பதாரியா பேசியதாவது:-

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால், இந்த காலப்பகுதியில் முழு அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனை இந்திய விமானப்படை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

எங்கள் விமானப்படை வீரர்களின் உறுதியும் தீர்மானமும் அதை உறுதிப்படுத்தியது. இந்திய விமானப்படை, நமது நாட்டின் இறையாண்மையையும் நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன். வடக்கு எல்லைகளில் சமீபத்திய நிலைப்பாட்டில் விரைவான பதிலடி கொடுத்த அனைத்து விமான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here