இந்தியா விற்பனைக்கு தயாராகும் பிக்சல் சீரிஸ்

இந்தியா விற்பனைக்கு தயாராகும் பிக்சல் சீரிஸ்
இந்தியா விற்பனைக்கு தயாராகும் பிக்சல் சீரிஸ்

Google’s Pixel lineup: கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்சல் 6a ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகிவிட்டது. பிக்சல் 6a பற்றிய ரெண்டர்கள் மற்றும் புகைப்படங்கள் என பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தான், தற்போது பிக்சல் 6a மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புது தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுவதாக தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 6a மாடல் தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், மே மாத வாக்கில் கூகுள் நிறுவனம் எப்போதும் பிக்சல் a சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.

அந்த வகையில், இந்தியாவில் சோதனை செய்யப்படுவது பிக்சல் 6a மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கூகுள் நிறுவனம் நேரடியாக வெளியிட்ட ஸ்மார்ட்போனாக பிக்சல் 4a இருக்கிறது. கூகுள் தரத்தில் அசத்தலான வெளியான பிக்சல் 4a மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. அதீத வரவேற்பு காரணமாக முன்னணி வலைதளங்களில் பிக்சல் 4a விற்பனை துவங்கிய போதெல்லாம், அடிக்கடி விற்றுத் தீர்ந்து கொண்டே இருந்தது.

இந்தியாவில் பிக்சல் 6a மாடலை வெளியிடுவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் 2022 I/O நிகழ்வு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விலேயே புதிய பிக்சல் 6a சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இதன் இந்திய வெளியீட்டு விவரங்களையும் இதே நிகழ்வில் எதிர்பார்க்க முடியும்.

இதையும் படிங்க: பில்கேட்சுக்கு கொரோனா தொற்று