மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவன தலைவராக டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம்

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அளித்து அங்கு அமையவுள்ள எய்ம்ஸ் நிறுவனத்திற்கான உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு தற்போது அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அரசிதழில் வெளியான அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன திருத்தச் சட்டத்தின்படி, மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமிக்கப்படுகிறார். மேலும், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்திற்கான உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமித்து உத்தரவிடுகிறது.

அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் பொது இயக்குனர், நிறுவன இயக்குனர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினராக இருப்பார்கள்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர், அந்த அமைச்சகத்தின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் அலுவலர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் அதிகாரி, இந்திய அறிவியல் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் விஜய்லட்சுமி சக்சேனா, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம்.கட்டோச்,டெல்லி எய்ம்ஸ் மருத்து கல்வி நிறுவனத்தின் நரம்பியல் துறை பேராசிரியர் காமேஷ்வர் பிரசாத்,

ஜோத்பூர் எய்ம்ஸ் சமூக மற்றும் குடும்ப மருந்துகள் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் பங்கஜ ராகவ், ஆந்திர பிரதேசம் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இருதயவியல் துறை பேராசிரியர் வனஜக்சம்மா, உத்தரபிரதேசம் ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் பிரசாந்த் லவானியா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் சண்முகம் சுப்பையா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். 3 எம்.பி.க்களுக்கான பதவியிடம் காலியாக வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.