Special business loan camp from today: தர்மபுரியில் இன்று முதல் சிறப்பு தொழில் கடன் முகாம்

தர்மபுரி: Special business loan camp from today at Dharmapuri: தர்மபுரியில் இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தருமபுரி கிளை அலுவலகத்தில் (DDDC கட்டிடம், முதல்தளம், பென்னாகரம் ரோடு, தருமபுரி – 636 701) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இச்சிறப்பு தொழில்கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டுமானியம் ரூ.150 இலட்சம் வரை பொதுக்கடன்களுக்கு வழங்கப்படும். NEEDS சிறப்புத் திட்டத்தின் கீழ் 25% முதலீட்டுமானியம் ரூ.75 இலட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் /தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு 9444396862, 9444396867 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.