பேசியதை வெட்டி ஒட்டியுள்ளார்கள்- ஆ.ராசா

தி.மு.க துணைப் பொதுச்செயலாளராகவும், எம்.பி.யாகவும் உள்ள ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைப் பற்றி ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசி உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், அ.தி.மு.க சார்பில் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சியையும் இன்று அவர் பெற்றிருக்கும் இடத்தையும், அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வந்த முறையையும் பெற்றிருக்கும் இடத்தையும் இரண்டையும் ஒப்பீடு செய்வதற்காக நான் பேசிய சில வார்த்தைகளை வெட்டியும் ஒட்டியும் சமூகவலைதளத்தில் வந்து கொண்டிருப்பதாக அறிகிறேன்.

அதுமுற்றிலும் தவறானது. நான் அவரின் தனிப்பட்ட பிறப்பையோ, புகழுக்கோ கலங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை.