நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்

நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள். தமிழ் திரையுலகில் நகைச்சுவை ஜாம்பவான்களில் நடிகர் வடிவேலுவுக்கும் இடம் உண்டு. தன் அசாத்திய நகைச்சுவை திறமையினால் தமிழ் ரசிகர்களை 29 வருடங்களாக கட்டிப் போட்டிருக்கும் நகைச்சுவை சக்கரவர்த்தி நடிகர் வடிவேலு.

இவர் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ல் மதுரையில் பிறந்தார். தன் இளம் வயதிலேயே தமிழ் திரையுலகின் மீது தீராத காதல் கொண்டவர் நடிகர் வடிவேலு. 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிகர் கவுண்டமணி செந்தில் என்ற இரண்டு ஜாம்பவான்கள் மத்தியில் சிறு புயலாக உள்ளே நுழைந்தார் நடிகர் வடிவேலு. கிராமத்து மண் வாசனையுடன் கூடிய பேச்சு மற்றும் இயல்பான நடிப்பால் நகைச்சுவையில் கலக்கினார் நடிகர் வடிவேலு.

வைகைப்புயல் என்ற அடைமொழியோடு 29 ஆண்டுகளாக தமிழக மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். வைகைப்புயல் வடிவேலுக்கு காலம் மாறிப்போச்சு, முத்து, நந்தவனத்தேரு , ஆணழகன் , பாரதி கன்னம்மா போன்ற படங்கள் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. நடிகர் பார்த்திபனுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவை காட்சிகள் தமிழ் ரசிகர்களை வயிறு புண்ணாகும் அளவு சிரிக்க வைத்தது. குறிப்பாக வெற்றிக்கொடி கட்டு என்ற திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் பெரும் கைதட்டலை பெற்றது.

2001 ஆம் ஆண்டு வெளிவந்த பிரண்ட்ஸ் திரைப்படம் நடிகர் வடிவேலுவுக்கு மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. 2003 ஆம் ஆண்டு வெளிவந்த வின்னர் திரைப்படம் நடிகர் வடிவேலுவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம். வின்னர் படத்தில் கைப்புள்ள என்ற கதாபாத்திரம் இன்றுவரை தமிழ் ரசிகர்களின் நினைவில் நின்று கொண்டிருக்கும்.

நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர்களில் நடிகர் வடிவேலுவும் முக்கியமானவர். இவர் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வைகைப்புயல் வடிவேலு சிறந்த பாடகரும் கூட. 10 வயது சிறுவன் முதல் பல்லு போன தாத்தா வரை நடிகர் வடிவேலுவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் ஏராளம்.
சிரிப்பு என்ற ஆயுதத்தால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நடிகர் வடிவேலு இன்று தன் பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here